Anwarul Azim Anar:பெண்ணாசை காட்டி வங்காளதேச எம்.பி. கொலை: வெளியான திடுக்கிடும் தகவல்!

Advertisements

எம்.பி. கொலை தொடர்பாக மேற்கு வங்காள போலீசாருடன் சேர்ந்து வங்காளதேச அரசும் விசாரணை நடத்தி வருகின்றது.

கொல்கத்தா:மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவுக்கு, அண்டை நாடான வங்காளதேசத்திலிருந்து ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யாக இருந்த அன்வருல் ஆசீம் அனார் (வயது 56) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த 12-ந் தேதி வந்தார்.

திடீரென மாயமான அவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்காளதேச உள்துறை மந்திரி அசாதுஸ்மான் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பாக மேற்கு வங்காள போலீசாருடன் சேர்ந்து வங்காளதேச அரசும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே இந்தக் கொலைகுறித்து சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. அகிலேஷ் சதுர்வேதி கூறுகையில், “இது திட்டமிடப்பட்ட கொலை. எம்.பி.யின் பழைய நண்பர் அக்தருஸ்ஸாமான் அவரைக் கொல்வதற்காக ரூ.5 கோடி கொடுத்துள்ளார். எம்.பி.யின் நண்பர் அக்தருஸ்ஸாமான் அமெரிக்காவை சேர்ந்தவர். கொல்கத்தாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கிறார். அங்கு ரத்தக்கறை உள்ளது.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளாஸ்டிக் கவர்கள் கிடந்தன. கொலையாளிகள் முதலில் எம்.பி. கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலைத் துண்டுதுண்டாக வெட்டிப் பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்துப் பல இடங்களில் வீசி எறிந்திருக்கலாம்.

இதுதவிர அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரிட்ஜில் சில உடல்பாகங்களை வைத்துள்ளனர். அதனைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முழு உடலும் கிடைக்கவில்லை. தடயவியல் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. விரைவில் முழு உண்மையும் தெரியவரும்” என்று கூறினார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாட்களில் எம்.பி.யைத்தவிர மற்றவர்கள் அடுத்தடுத்து குடியிருப்பிலிருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கொலையைச் செய்த ஒருவரான ஜிஹாத் ஹவ்லதார் என்பவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். இவர் அங்குள்ள கறிக்கடையில் கறி வெட்டுபவராக இருந்து வந்துள்ளார். ஜிஹாத் மீது பல வழக்குகளுள்ள நிலையில் எம்.பி.யின் நண்பர் கொலைக்காக இவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்துக் கொல்கத்தாவிற்கு வரவழைத்துள்ளார்.

மேலும் வங்காளதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்கு அன்வருலை அழைத்து வர அவரது நண்பர், ஷிலாந்தி என்ற பெண்ணைப் பயன்படுத்தியதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷிலாந்தி வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் என்றும் முக்கிய குற்றவாளியான எம்.பி. நண்பரின் காதலி என்றும் அன்வருல் கொலை செய்தபோது ஷிலாந்தியும் உடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *