
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில், குழந்தைகளைக் கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு விசாரணைக்காகக் கண்ணாடிப் புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாகச் சிறிய காகிதக் குடுவைகளில் விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூரியகாந்த் அதிர்ச்சியடைந்ததையும், கண்டனம் தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போலக் காட்சியளிக்கும் மது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்று கூறிய நீதிபதி, இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வருங்காலத் தலைமுறையினரைச் சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகத் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.



