
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லையென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 10 ஆண்டுகளாகத் தெலுங்கானாவில் ஆட்சி செய்த சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டீரிய சமிதி அரசு ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இது தெலுங்கானா மக்களுக்குத் தெரியும்.
நாடு முழுவதும் ஒரே ஒரு மாநிலம் மட்டுமே மத ரீதியான இடஒதுக்கீடு வழங்குகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. தெலுங்கானாவில் பாஜ., அரசு ஆட்சி வந்தபிறகு முஸ்லிம் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., க்கு இடஒதுக்கீடு அளிப்போம். உங்கள் (தெலுங்கானா மக்கள்) ஓட்டுக்கள் தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆராய்ந்த பிறகு ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக் கட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தால், நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ., வுக்கு ஓட்டளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இன்று இளைஞர்கள், விவசாயிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பி.ஆர்.எஸ் அரசால் ஏமாற்றமடைந்துள்ளனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

