ADMK:களையெடுக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி…கட்சி நிர்வாகிகள் கலக்கம்!

Advertisements

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில் எதிராளிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்தக் கட்சியினரோடும் பா.ஜ,க, வுக்கு ஆதரவான அமைப்பினருடனும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்.

அந்த வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததற்காக அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“வான் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்கிற திருக்குறளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் நண்பர்கள்போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவ பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என விளக்கியுள்ளார்.

கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராவது இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தனது கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அதிரடியான வார்த்தைகளைக் குறிப்பிட்டு கட்சியினருக்கு கடிதம் எழுதியது இல்லை.

அதே நேரத்தில் மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை. ஆனால் தற்போது கட்சி நிர்வாகிகளைக் களையெடுக்கும் விதத்தில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *