
புதுடெல்லி:அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் சந்தையைத் தவறாகக் கையாண்டு, கணக்குகளில் மோசடிகள் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை பங்குச்சந்தையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, அதானி நிறுவனத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளைச் சுவிஸ் வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது எனத் தகவல் வெளியானது.
அதில், சுவிட்சர்லாந்தில் கோதம் சிட்டி என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ம் ஆண்டு அதானி குழுமம் பண மோசடி, பங்கு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.
இதனால் சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம், மறுக்கிறோம்.
அதானி குழுமத்திற்கு சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்தத் தொடர்பும் இல்லை. கூறப்படும் உத்தரவில் கூடச் சுவிஸ் நீதிமன்றம் எங்கள் குழு நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, பகுத்தறிவற்றது மற்றும் அபத்தமானது. இந்த முயற்சியை வன்மையாகக் கண்டில்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

