Actress Gautami Cheating Case: சொத்து ஏமாற்றியவர் குடும்பத்தோடு கைது!

Advertisements

நடிகை கவுதமியின் ரூ.25 கோடி சொத்தினை  அபகரிப்பு செய்த நபர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை கவுதமி, அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில் ‘‘ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். அப்போது கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் நிலத்தை விற்றுத் தருவதாக கூறினார்.

அதைத் தொடர்ந்து நிலத்தை விற்பதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். ஆனால், எனது கையெழுத்தை மோசடியாகப் போட்டும் போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நிலத்தை அபகரித்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் செந்தில் குமாரி, துணைஆணையர் நிஷா தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினார். முன்னதாக அழகப்பனுக்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி, அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வெளிநாடு தப்பி செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த அழகப்பன்(63), அவரது மனைவி நாச்சாள்(57), மகன் சிவ அழகப்பன்(32), மருமகள்ஆர்த்தி(28), கார் ஓட்டுநர் சதீஷ்(27) ஆகிய 5 பேரை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அனைவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அங்கிருந்து சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அழகப்பன் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து, 26 பவுன் தங்க நகை, ரூ.3.5 லட்சம் ரொக்கம், 4 சிம்கார்டு மற்றும் வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *