
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
சினிமாவில் கலக்கிய நடிகர் கோவிந்தா: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா இணைந்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில், மும்பை வட மேற்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மும்பையில் போட்டியிட்ட நடிகர் கோவிந்தா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம் நாயக்கை தோற்கடித்தார்.
அரசியலில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கோவிந்தா:
தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே, சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகத் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்த அவர், “அரசியலுக்கு திரும்பியது அற்புத உணர்வைத் தருகிறது.
எந்தப் பொறுப்புகளைக் கொடுத்தாலும் அதை ஏற்று கொள்வேன். 2004 முதல் 2009 வரை அரசியலில் இருந்தேன். 14ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தேன்” என்றார். 1990 மற்றும் 2000களில் பல ஹிட் படங்களைக் கொடுத்துப் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகர் கோவிந்தா.
கடைசியாக ரங்கீலா ராஜா படத்தில் நடித்தார். ராஜா பாபு, கூலி நம்பர் 1, ஹசீனா மான் ஜாயேகி, பார்ட்னர், பாகம் பாக் போன்ற அவரின் திரைப்படங்கள் செம்ம ஹிட் அடித்தது. லவ் 86 மூலம் திரையுலகில் அறிமுகமாகி, கடந்த 30 ஆண்டுகளாகப் பாலிவுட் உலகை கலக்கி வந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகும்போது அவர் அளித்த பேட்டியில், “அரசியல் என்பது எங்கள் ரத்தத்திலும், குடும்பத்திலும் இருந்ததில்லை. நான் அதற்குத் திரும்பமாட்டேன்” என்றார்.
