
மும்பை: பிரபல ஹிந்தி நடிகர் கோவிந்தா மீண்டும் அரசியலில் குதிக்கிறார். இந்தத் தேர்தலில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் அவர் மும்பை தொகுதியில் போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஆந்திராவில் என்டி ராமராவ் ஆகியோர் அரசியலில் குதித்து மாநில முதல்வர்கள் ஆனார்கள்.
“பிரேக் டான்ஸ் புகழ்” கோவிந்தா!
அதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர்கள் சத்ருகன் சின்கா, தர்மேந்திரா போன்ற நடிகர்களும் அரசியலில் குதித்தனர். அந்த வரிசையில் பாலிவுட் திரைப்படங்களில் “பிரேக் டான்ஸ்” ஆடிப் புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தாவும் (61) அரசியல் பிரவேசம் செய்தார்.
கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் 165 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் காங்கிரஸில் இணைந்தவர், வடக்கு மும்பையில் போட்டியிட்டு வென்றார். இங்கு 5 முறை பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக்கை சுமார் 50,000 வாக்குகளில் தோல்வியுறச் செய்தார்.
நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வராமல் இருந்ததால் அவர்மீது மீது கடும் விமர்சனங்கள் கிளம்பின. கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 2009-ல் அவர் அரசியலிலிருந்து விலகி நடிப்பைத் தொடர்ந்தார்.
தற்போது மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். பாஜக ஆதரவில் ஆட்சி செய்யும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் கோவிந்தா சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் அரசியலில் மீண்டும் நுழைந்து தேர்தலில் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வட மேற்கு மும்பை தொகுதியின் தற்போதைய எம்பி.யாகக் கஜனன் உள்ளார்.
ஏக்நாத் பிரிவின் சிவசேனாவில் இருப்பவருக்கு அங்கு மீண்டும் வாய்ப்பளிக்க அவரது கட்சி விரும்பவில்லை. இதனால், அந்தத் தொகுதியை முக்கியக் கூட்டணியான பாஜக தன் வசப்படுத்த முயன்றது. இப்போது நடிகர் கோவிந்தாவின் அரசியல் மறு நுழைவால் அவருக்கே அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.



