
பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக, மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள தீவு நாடானா சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக இன்று, மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கிறார். இதற்காக அவர் இன்று காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சைப்ரஸ் புறப்பட்டார். சைப்ரஸ் நாட்டு அதிபரான நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார். நாளை வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக தலைநகர் நிகோசியாவில் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் லிமாசோல் நகரில் நடைபெறும் வர்த்தக மன்றத்திலும் சிறப்புரையாற்றுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை கனடா புறப்படுகிறார். 17-ந் தேதி வரை அங்கே இருக்கும் அவர், கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 18-ந் தேதி ஐரோப்பிய நாடான குரேஷியா செல்கிறார்.




