YouTuber Irfan:அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரிய இர்பான்!

Advertisements

பிரபல யூடியூபர் இர்பான், துபாயில் தனது மனைவிக்குப் பரிசோதனை செய்து பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி, அறிவித்தார்.

சென்னை:இந்தியாவில் குழந்தை வளர்ச்சியை நவீன முறையில் ஸ்கேன் செய்யும் வசதி வந்தபோது கருவிலேயே ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் பிறப்புக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கேட்பதோ அல்லது கண்டறிந்து அறிவிப்பதோ மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதோடு குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சில வெளிநாடுகளில் குழந்தைகளின் பாலினத்தை கண்டறியவோ அதனை அறிவிக்கவோ எந்தத் தடையும் இல்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான், துபாயில் தனது மனைவிக்குப் பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி, அறிவித்து அதனை வீடியோ எடுத்துப் பதிவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கச் சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக நேற்று வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டுச் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரினார்.

மேலும், இர்பான் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பாலினம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படாவிட்டாலும், அதனை வீடியோமூலம் பொது வெளியில் அறிவித்தது சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *