மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்- தர்மபுரியில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Advertisements

தர்மபுரி: வருகிற செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்பட்டன.

கடந்த 7-ந் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனையும் நடத்தினார். இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டங்களை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர்.

அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *