Wayanad landslide:2 பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் பலி… 23 மாணவர்களைக் காணவில்லை.!

Advertisements

திருவனந்தபுரம்:வயநாட்டில் கடந்த 30-ந்தேதி 3 இடங்களில் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

அவர்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டார்களா? காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்களா? என்பது தெரியாமல் இருக்கிறது. மாயமான அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பலரது உடல், ஆற்றில் 15 கிலோ மீட்டர் தூரம்வரை கிடந்தது. பல உடல்கள் ஆற்றில் பாறைகளுக்கு உள்ளேயும், மரங்கள் உள்ளிட்ட குப்பைகளுக்குள்ளும் கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. இதே போன்று மாயமான பலர் எங்கேயாவது சிக்கிக் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மட்டுமின்றி முண்டக்கை மற்றும் சூரல்மலையில் செயல்பட்டு வரும் 2 அரசு பள்ளிகளும் கடுமையான சேதமடைந்துள்ளன. அந்தப் பள்ளிகளைச் சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் மற்றும் பாறைகள் குவிந்து கிடக்கின்றன.

பள்ளிகளின் உள்ளே சகதிகள் மற்றும் மண் நிறைந்து கிடக்கிறது. இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் பலியாகி இருக்கின்றனர். 2 பள்ளிகளையும் சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகினர். மேலும் 23 மாணவர்களைக் காணவில்லை.

அவர்கள் மண்ணுக்குள் புதைந்தோ அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் படித்து வந்த குழந்தைகளில் பலர் குடும்பத்தோடு பலியாகி இருக்கின்றனர். இதனால் அவர்களது உடல்களை அடையாளம் காண்பிக்ககூட குடும்பத்தினர் இல்லை.

இதன் காரணமாகப் பல குழந்தைகளின் உடல்களை அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தைகளின் உருக்குலைந்த உடல்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *