
வள்ளலார் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு, எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் நடத்த முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் எதிர்ப்பையும் மீறி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் வடலூர் பகுதியில் குவிக்கப்பட்டதால் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உலக புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமாக வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.இங்கு வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் அதற்கான டென்டர் விடப்பட்டு இன்று சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வடலூரில் நடைபெற்றது.
சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையத்தைச் சத்திய ஞான சபை வளாகத்தில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் சுத்த சன்மார்க்க சங்கத்தினர் அண்மையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் இல்லையெனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று வள்ளலார் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடலூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பாமக தொண்டர்கள் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவைத் தடுக்கும் பணியில் ஈடுபட முயன்றதால் வடலூரில் பரபரப்பு நிலவியது.வள்ளலார் சபை வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட பாமகவினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பமாக வினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் வடலூர் பகுதியில் குவிக்கப்பட்டதால் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

