TN School Education Department:ஜூலை 8 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு!

Advertisements

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 31-ம் தேதிவரை நடைபெற உள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 13-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தமுறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 82,477 ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே 24 முதல் ஜூன் 30-ம் தேதிவரை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது. ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் கலந்தாய்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் பள்ளிகள் திறப்பு மற்றும் இதர நிர்வாகப் பணிகளால் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியாவதில் தாமதம் நிலவிவந்தது.

இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய திருத்தப்பட்ட கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு;- மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூலை 4, 5-ம் தேதிகளில் முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 6-ம் தேதி வெளியாகும்.

தொடர்ந்து அனைத்துவிதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றளவில் பல்வேறு சுற்றுகளாக ஜூலை 8 முதல் 31-ம் தேதிவரை நடத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *