
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22.11.2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


