Sureka Yadav:பிரதமர் பதவியேற்பு விழா: வந்தே பாரத் லோகோ பைலட் சுரேகாவுக்கு அழைப்பு!

Advertisements

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தூய்மை பணியாளர்கள், வந்தே பாரத் பெண் டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராக நாளை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் தலைவர்களுக்குப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் என விவிஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அதேவேளையில், தூய்மை பணியாளர்கள், வந்தே பாரத் பெண் லோகோ பைலட்டுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் 8,000 சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் மூத்த உதவி லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனன் கலந்துகொள்ள உள்ளார். தற்போது வந்தே பாரத் ரயில்களில் பணிபுரிந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சென்னை – விஜயவாடா மற்றும் சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மட்டுமல்ல, ஜன் சதாப்தி போன்ற பல்வேறு ரயில்களை இயக்கி 2 லட்சத்துக்கும் அதிகமான நேரங்களைக் கடந்துள்ளார்.

பிரதமர் பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா மேனன் உடன் சேர்த்து மொத்தம் 10 லோகோ பைலட்கள் கலந்துகொள்ளவுள்ளனர். ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவும் இதில் அடக்கம். 1988-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டும்கூட. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – சோலாப்பூர் இடையேயான வந்தே பாரத் ரயிலைத் தற்போது சுரேகா இயக்கி வருகிறார்.

இவர்கள் தவிர, தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள் மற்றும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களும் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *