
போலீசார் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்களைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவின் கடப்பாவில் காவல் நிலையத்தில் எழுத்தாளராக இருந்த வெங்கடெஷ்வரலு, அங்கிருக்கும் கூட்டுறவு காலனியில் வசித்து வந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த வெங்கடேஷ்வரலு, திடீரெனத் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் இரண்டு பெண்கள் குழந்தைகளைச் சுட்டு கொலை செய்துள்ளார்.
அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்ட வெங்கடேஷ்வரலு, ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். வெங்கடேஷ்வரலு வீட்டைச் சோதனையிட்டதில், கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சொத்துக்களையும், அரசு பணியைத் தனது இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சக போலீசார் பேசுகையில், நேற்றிரவு வரை பணியில் இருந்த வெங்கடேஷ்வரலு பொறுப்பில் அதிகாரிகளின் துப்பாக்கி இருந்ததாகவும், அதில் ஒன்றை எடுத்துச் சென்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். எனினும், தற்கொலைக்கான காரணம் என்ன என்ற விசாரணையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


