
தமிழக சட்டமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சாதி ஆணவப் படுகொலைகளை ஏற்க முடியாது என்றும், அவற்றுக்கு எதிராக தனி சட்டம் கொண்டு வரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சாதி ரீதியில் நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவுரை எழுத வேண்டிய கட்டாயத்தில் நவீன தமிழ்ச் சமூகம் இருக்கிறது. ஏனெனில் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்கள், வழிகாட்டுதல்கள் போதுமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே தனி சட்டம் இயற்றுவது தான் சரியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உலகெங்கும் பரவி அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டு கொள்வது என்ன நியாயம் என்பது தான் நம்மை வருத்தும் கேள்வியாக இருக்கிறது. எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவரை மற்றொருவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க முடியாது. அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடைபெறும் துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது.
நம் சமுதாயத்தை தலைகுனிய செய்து விடுகிறது. பெண்கள் தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானிப்பதை தடுக்கும் ஆணாதிக்கமும் இந்த குற்ற செயலின் பின்னால் ஒளிந்திருக்கிறது. ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த அநீதியை தடுக்க வேண்டும் என்பது அனைவரது எண்ணமாகவும் இருக்கிறது. இந்த படுகொலைக்கு சாதி மட்டுமே காரணம் அல்ல.
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் எதன் பொருட்டு நடந்தாலும் கொலை, கொலை தான். அதற்கான தண்டனைகள் மிக மிக கடுமையாக தரப்பட்டு வருகின்றன என்றார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் பேசுகையில், சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் என முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆணையம் சார்பில் கருத்து கேட்கப்படும் எனவும். இறுதியாக ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



