
கோவை – அவிநாசிச் சாலை மேம்பாலத்திற்குத் தீரன் சின்னமலை பெயரைச் சூட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா?
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த தீரன் சின்னமலை பெயரை வைத்திருக்கலாமே? என்று வினவியுள்ளார்.
விடுதலைப் போராட்டக் களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக் கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த கொடி காத்த குமரன் பெயரை வைத்திருக்கலாமே? என்று வினவியுள்ளார்.
தாயக விடுதலைக்காகக் கோவை கொடுஞ்சிறையில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பெயரை வைத்திருக்கலாமே? என்று வினவியுள்ளார்.
பொது இடங்களுக்குச் சாதிப் பெயரை வைத்தால் சாதிக் கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? என்றும் வினவியுள்ளார்.
