S. S. Sivasankar: 19-ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Advertisements

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதற்கு அமைச்சர் சிவசங்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகத் தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்கத் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகத் தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை முழுமையாகப் பார்க்க வேண்டும். ஜன.19-ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். 19-ம் தேதி நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகுறித்து முடிவு எடுக்கப்படும். கருணை அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதிதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்டுள்ளது என்றார்.

பிப்ரவரியில் புதிய ஓட்டுநர், நடத்துநர் நியமனம்:

ஓட்டுநர், நடத்துநர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிந்து தற்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம்வரை நேர்முகத் தேர்வு நடைபெறும், அதற்குப் பின் ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்படுவர். தொழிசங்கங்கள் முன்வைத்த 2 கோரிக்கைகள் ஏற்பு; மேலும் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளோம். அரசின் நிதி நிலையைப் பொறுத்து எஞ்சிய 2 கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்று கூறியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *