
ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு கொடுத்து வருகின்றன. மேலும் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.
இதனால் இஸ்ரேலும், ஈரானை தாக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இஸ்ரேல் அணுஆயுத சோதனையை நிகழ்த்தியதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நெகேவ் என்ற பாலைவனம் உள்ளது.
இங்கு இஸ்ரேல் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் ராணுவ தளம் மற்றும் சில முக்கிய கட்டமைப்புகள் உள்ளன. எல்லவாற்றுக்கும் மேலாக இஸ்ரேலின் டிமானோ என்ற பகுதியில் ஷிமோன் பெரஸ் எனும் அணுஉலை அணுஆயுத சோதனை மையம் உள்ளது. இது மிகவும் ரகசியமான இடமாக உள்ளது.
இங்கு அணு உலை மற்றும் மறுசுழற்சி ஆலைகள் உள்ளன. உலக நாடுகளை பொறுத்தவரை இந்த இடம் இஸ்ரேல் அறிவிக்கப்படாத அணுஆயுத திட்டத்துக்கான சோதனைக்கூடமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த பாலைவனத்தை சுற்றிய குடியிருப்புகளில் பெடூயின் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று காலை 9 மணியளவில் அந்த பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை நெகேவ் பாலைவனத்தையொட்டி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உணர்ந்தனர்.
சில வினாடிகள் வரை பூமி குலுங்கி உள்ளது. இஸ்ரேலில், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.



