Ranjana Nachiyar: கைது!

Advertisements

சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி செல்லும் மாநகர பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் தொங்கிய படியே  செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று 88K மாநகர பேருந்து போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்றபோது, பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும், கூச்சல் போட்டவாறு பயணம் செய்தனர்.

இதை பேருந்தில் பயணம் செய்த பாஜக பெண் நிர்வாகி தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருந்தார். பின்னர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், கீழே இறங்கிச் சென்ற அந்த பெண் பேருந்தின் முன் மற்றும் பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் தகாத வாரத்தையால் திட்டியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக பாஜக பிரமுகரும், சினிமா துணை நடிகையுமான ரஞ்சா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *