
எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதிக்குக் கூட எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சேலம்:சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன. அவர் தனது தொகுதிக்குக் கூட எதுவும் செய்யவில்லை.
தற்போது தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதல்-அமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

