
கோடா: ராஜஸ்தானில், காரில் குழந்தை இருப்பது தெரியாமல் பெற்றோர்கள் சென்ற நிலையில், 3 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த நிகழ்வு நடந்துள்ளது.
ராஜஸ்தானின் கோடா நகரில் நேற்று(மே 15) நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதீப் நாகர் என்பவர், மனைவி, 2 குழந்தைகளுடன் காரில் வந்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் வாயிலில், மனைவியும், மூத்த மகளும் இறங்கி விட்டனர். 3 வயதே ஆன 2வது குழந்தை கோர்விகா நாகர் கீழே இறங்கவில்லை.
இதனைத் தாயாரும் கவனிக்கவில்லை. பிரதீப் நாகரும் கவனிக்கவில்லை. கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி, விட்டுப் பிரதீப் நாகர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் 2 மணி நேரம் இருந்த அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவு செய்தனர்.
அங்கிருந்து கிளம்பியபோது தான் 2வது குழந்தை, தங்களுடன் இல்லை என்பதை அறிந்தனர். பிறகு, அவர்கள் குழந்தையைத் தேடத் துவங்கினர். காரில் வந்து பார்த்தபோது, கதவுகள் மூடப்பட்டு கிடந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கோர்விகா நாகர் கிடந்தது அவர்களுக்குத் தெரிந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு, குழந்தையைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதனை உறுதி செய்த போலீசார், குழந்தையின் இறப்பு தொடர்பாக அவர்கள் புகார் ஏதும் அளிக்கவில்லை எனவும், பிரேத பரிசோதனை நடத்தவும் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்தனர்.

