
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அவற்றை தடுத்து நிறுத்தி இந்திய படைகள் தாக்கி அழித்தன.
இதனையடுத்து நேற்று முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “பயங்கரவாத கட்டமைப்புகளைத் தகர்க்கவே ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. ஒன்பது பயங்கரவாதி முகாம்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அதன் மூலம், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவூப், முடாசிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தனர்.சண்டை நிறுத்தம் அறிவித்த அன்றே இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், “பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக பயங்கரவாதிகளை பிடிக்காமலேயே எப்படி ஆபரேஷன் சிந்தூர் வெற்றி என சொல்வீர்கள்” என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர், “26 நபர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதற்கு காரணமான 4 அல்லது 5 பயங்கரவாதிகள் பிடிப்பட்டுவிட்டார்களா? அவர்கள் இன்னும் பிடிப்படவில்லை என்றால், எப்படி ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்வீர்கள்?பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? எல்லாம் இயல்பாக இருக்கிறது என்ற உங்கள் அரசாங்கத்தின் உறுதிமொழியின் பேரில் மக்கள் காஷ்மீருக்குச் சென்றனர். மக்கள் தங்கள் குடும்பங்களுடன் அங்கு சென்று தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.



