
புதுடில்லி, ”மேற்கு வங்கத்தில், ஏழை மக்களிடமிருந்து, 3,000 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம், ஊழல்வாதிகளிடமிருந்து அமலாக்கத் துறை பறிமுதல் செய்த சொத்துகள் மற்றும் பணத்தின் வாயிலாக, மீண்டும் அவர்களுக்கே கிடைக்க பணியாற்றி வருகிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
ரூ.3,000 கோடி லஞ்சம்
மொத்தமுள்ள 42 தொகுதிகளில், கடந்த முறை 18ல் வென்ற பா.ஜ., இந்த முறை அதிக தொகுதிகளைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியில், திரிணமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ராவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், அரச குடும்பத்தைச் சேர்ந்த, ‘ராஜமாதா’ என்றழைக்கப்படும் அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். சமீபத்தில், அம்ரிதா ராயிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவரிடம் பிரதமர் மோடி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகிகள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏழை மக்களிடமிருந்து, 3,000 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை, அங்குள்ள ஊழல்வாதிகளிடமிருந்து அமலாக்கத் துறையினர் கைப்பற்றிய சொத்துகள் மற்றும் பணத்தின் வாயிலாக, மீண்டும் ஏழைகளுக்கே கிடைக்க பணியாற்றி வருகிறேன். இதற்கான சட்ட வழிகளை நான் ஆராய்ந்து வருகிறேன்.
பாடம் புகட்டுவர்
ஆம் ஆத்மிக்கு எதிராகப் போராடியவர்கள், தற்போது அதிகாரத்திற்காகக் கூட்டு சேர்ந்துஉள்ளனர். ஊழல்வாதிகள் அனைவரும் தங்களது குடும்ப நலனுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். திரிணமுல் காங்., ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வர். இவர்களுக்கு வரும் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். பா.ஜ., தலைமையிலான கூட்டணி, இளைஞர்களின் பிரகாசமான எதிர் காலத்திற்காகவும், ஊழலற்ற நாட்டிற்காகவும் போராடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
