
கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும்! பிரதமர் மோடி
நாகையிலிருந்து இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஆனது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி: நாகையிலிருந்து இலங்கைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனைப் பிரதமர் மோடி காணொலி காட்சிமூலம் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி துறை மற்றும் ஆயுஷ் துறைக்கான மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, கப்பல் போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.

இதன்பின்னர், பிரதமர் மோடி பேசும்போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே தூதரக மற்றும் பொருளாதார உறவுகளில் நாம் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கியிருக்கிறோம்.நம்முடைய உறவுகளை வலுப்படுத்துவதில் நாகை மற்றும் காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடக்கம் ஒரு முக்கியம் வாய்ந்த மைல்கல்லாக உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும், கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தில் ஒரு ஆழ்ந்த வரலாற்றைப் பகிர்ந்து வருகிறது என்று அவர் பேசியுள்ளார்.இந்தக் கப்பல் போக்குவரத்து ஆனது வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும். இரு நாடுகளின் இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் அது உருவாக்கும் என்று அவர் பேசியுள்ளார்.
Ferry services between India and Sri Lanka will enhance connectivity, promote trade and reinforce the longstanding bonds between our nations. https://t.co/VH6O0Bc4sa
— Narendra Modi (@narendramodi) October 14, 2023


