
தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எப்போதும் கடுமையாகப் பரப்புரை செய்ய வேண்டியதில்லை என்றும், மக்களின் தேவைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் இருந்தால் போதும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் ராம்நாத் கோயங்கா நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ராம்நாத் கோயங்கா நாடே முதன்மையானது என்கிற கொள்கையைக் கொண்டவர் எனத் தெரிவித்தார்.
எது சரியென்றும் உண்மையென்றும் கருதுகிறாரோ அந்தப் பக்கம் உறுதியாக நின்ற அவர், எல்லாவற்றையும் விடக் கடமையை மேலாகக் கருதியவர் என்றும் கூறினார்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும்போது ஜனநாயகம் வலுவடையும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அண்மையில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் அதற்குச் சான்றாகும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சி மாதிரி உலகின் நம்பிக்கை மாதிரியாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஒருவர் எப்போதும் பரப்புரை நோக்கத்தில் இருக்க வேண்டியதில்லை என்றும், மக்களின் தேவைகளை உணர்ந்துகொள்ளும் நிலையில் இருந்தால் போதும் என்றும் பிரதமர் கூறினார்
மாவோயிசத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகவும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்தது என்றும் குறிப்பிட்டார்.


