Minister Senji Mastan:மீண்டும் கட்சிப் பதவி கொடுத்த திமுக தலைமை: பின்னணி என்ன?

Advertisements

விழுப்புரம்: திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை கடந்த 11-ம் தேதி அப்பொறுப்பிலிருந்து விடுவித்துத் திமுக தலைமை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, திமுகவில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதாகச் சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள். அத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியும் மஸ்தானும் இருதுருவங்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மஸ்தானை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய திமுக தலைமை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமித்தது.

இதையும் சர்ச்சையாக்கியவர்கள், மஸ்தானை ஓரங்கட்டிவிட்டு பொன்முடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தலைமையென விமர்சித்தார்கள். இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேறு வரவிருப்பதால் உட்கட்சிப் பிரச்சினைகள் திமுகவின் வெற்றிக்குப் பாதகம் உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக மஸ்தானை நியமித்திருக்கிறது திமுக தலைமை. விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக சி.அன்புமணியை களமிறக்கியுள்ளது. நாதக டாக்டர் அபிநயாவை வேட்பாளராக அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *