Minister Atishi:எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. உண்ணாவிரதம் தொடரும்!

Advertisements

டெல்லி மக்களுக்கு அரியானாவிடமிருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அதிஷி கூறியிருக்கிறார்.

புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அரியானா மாநிலத்திலிருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாகத் திறந்து விடாததன் காரணமாகவே இந்தத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடந்த 21-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். டெல்லி மக்களுக்கு அரியானாவிடமிருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று கூறியிருக்கிறார்.

அவரது உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளாக நீடிக்கிறது. இதனால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதுபற்றி அதிஷி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-
உண்ணாவிரதத்தால் என் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, உடல் எடை குறைந்துவிட்டது. கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது எனது உடல்நிலையை கடுமையாகப் பாதிக்கும். உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்வேன். நேற்று டாக்டர்கள் எனது உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

அரியானா அரசு கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் டெல்லியின் பங்கை ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன்கள் என்ற அளவுக்குக் குறைத்துள்ளது. இதனால், டெல்லிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி குழுவுடன் கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், ‘டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது பற்றிப் பரிசீலனை செய்வதாக அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி உறுதி அளித்திருக்கிறார்’ என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *