Advertisements

கடந்த எட்டு மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மருத்துவர் ராமதாசுக்கும் மகன் மருத்துவர் அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது . இது தேர்தல் சமயம் என்றும் பாராமல் இருவரும் ஒருவரை ஒருவர் சளைக்காமல் போராடி வருகின்றனர் .
இதன் உச்சகட்டமாக மாம்பழ சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷனுக்கு 250 பக்க அளவில் ஒரு கடிதத்தை மருத்துவர் ராமதாஸ் அனுப்பியிருக்கிறார் . அத்துடன் தேவையான ஆவணங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார் . இந்த நிலையில் மாம்பழ சின்னத்தை தேர்தல் கமிஷன் ஏற்கனவே எங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டது யாரும் ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர் அன்புமணியும் அவரது அணியை சேர்ந்த வழக்கறிஞர் கே பாலுவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வருகிற 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி தான் நீடிப்பார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பி உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் கே பாலு தெரிவித்திருந்தார் . இது குறித்து மருத்துவர் அன்புமணி கருத்து தெரிவிக்கும் பொழுது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் என்னைத்தான்
அங்கீகரித்து உள்ளது. மாம்பழச் சின்னத்தையும் எங்களுக்கு ஒதுக்கி விட்டனர் . யாரும் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார் .
இது மட்டுமல்லாமல் தேர்தலின் போது கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் ஏ படிவம் பி படிவம் ஆகியவற்றில் கையெடுத்து இடுவதற்கும் தனக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்பொழுது, தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பை யாரும் மாற்ற முடியாது நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது மாம்பளச் சின்னம் பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார் .
இதற்கிடையே அன்புமணி தரப்புக்கு மாம்பழச் சின்னம் எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது .நடந்து முடிந்த பிகார் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக கூறி தேர்தல் கமிஷனுக்கு முன்னதாகவே கடிதம் கொடுத்து மாம்பழ சின்னத்தை கேட்டு பெற்றுள்ளதாக தெரிகிறது . இதனை அடுத்து மருத்துவர் அன்புமணி மீது ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று கூறியுள்ளார் . பீகார் தேர்தலை வைத்து அன்புமணி மோசடியாக மாம்பழ சின்னத்தை பெற்று இருக்கிறார் இது செல்லாது என அறிவித்திருக்கிறார் .
அதேசமயம் இதுகுறித்து அன்புமணி ஆதரவாளரும் சட்ட நிபுணருமான வழக்கறிஞர் கே பாலு கூறும் பொழுது பீகாருக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநில தேர்தலுக்கும் சேர்த்து நாங்கள் மாம்பழ சின்னத்தை வாங்கி விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மாம்பழ சின்னம் குறித்து மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது ,
அன்புமணி தரப்பில் மேலும் கூறும்பொழுது மாம்பழ சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி விட்டதால் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான கட்சியினர் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் . இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் தரப்பில் கூறும் பொழுது பீகார் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் எழுதி மாம்பழச் சின்னத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அது பீகார் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். மாம்பழ சின்னத்தை வாங்கிவிட்டு அவர் ஏன் பீகாரில் போட்டியிடவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது அன்புமணி ஏமாற்று அரசியலை மேற்கொண்டு வருகிறார் . எங்கள் தரப்பை பொறுத்தவரையில் பீகார் தேர்தல் முடிவடைந்ததும் நாங்கள் கொடுத்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க போவதாக தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது. அதற்கு தேவையான ஆவணங்களையும் இணைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர் .
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது சின்னத்தை பொருத்தவரையில் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கப்படும் தற்பொழுது அன்புமணி பக்கம் கூடுதல் எண்ணிக்கையில் உள்ளனர். கட்சியின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களும் அவர் பக்கமே அதிக அளவில் இருக்கிறார்கள் .
அன்புமணி தரப்பில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது . அதேசமயம் ராமதாஸ் தரப்பிலிருந்து ஒரு பட்டியல் தரப்பட்டது ஆனால் ராமதாஸ் தரப்பில் உள்ள பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது .
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷனை பொருத்தவரையில் கட்சியின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய பதவிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். . தற்பொழுது அன்புமணியை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது . அவரின் கட்டுப்பாட்டில் பாமக நிர்வாகிகள் பெருமளவு உள்ளனர் அதே சமயம் ராமதாஸ் பக்கம் வன்னியர் சங்க நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர் . எனவே மாம்பழ சின்னம் அன்புமணிக்கு தான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர் .
மேலும் , அவர்கள் கூறும்பொழுது வருகிற தேர்தலில் ராமதாஸ் தனிச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.
Advertisements


