
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் – வசந்தி தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். வசந்தி 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில், கமலக்கண்ணன் கூலி வேலைக்குச் சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதியடைந்த கமலக்கண்ணன் கடந்த 14ஆம் தேதி திடீரென உயிரிழந்தார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!. இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ.வேலு, அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது #DravidianModel அரசு துணை நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.



