
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேமுதிக சார்பில் விஜய பிரபாகர் போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. அந்த வகையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் , எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி, மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேமுதிக சார்பில் விஜய பிரபாகர் போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் மகன் மூத்த மகனாவார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் அரசியலில் முகம் காட்டி வந்தாலும், முதன்முறையாகத் தற்போது தான் தேர்தலில் களம் காண்கிறார். இதே போன்று, அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட மற்ற 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., நல்லதம்பி, கடலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


