
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 4 கிலோ தங்கத் தகடுகள் காணாமல் போனது பற்றிக் கேரளச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அதைப்பற்றி விவாரிக்கக் கோரினர்.
1998ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தொழிலதிபர் விஜய் மல்லையா முப்பது கிலோ தங்கமும், 1900 கிலோ செப்புத் தகடுகளும் நன்கொடையாகக் கொடுத்திருந்தார். செப்புத் தகடுகள் மேல் மெல்லிய தங்கத் தகடுகளை ஒட்டிக் கருவறைக் கூரையில் வேயப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு சீரமைப்புப் பணியின்போது 4 கிலோ தங்கத் தகடுகள் காணாமல் போனது.இது கேரள அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்க ஏடிஜிபி வெங்கடேஸ் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.இதையடுத்துப் பேசிய அவைத் தலைவர் சம்சீர், சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கத் தகடுகள் காணாமல் போன விவகாரத்தில் விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் இதுபற்றி விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளதாகவும், அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும் என்று அவர் கூறினார்.
