K. Annamalai – BJP: வரும் தேர்தலில் பா.ஜ.க. 33 சதவீத வாக்குகள் பெறும்!

Advertisements

பா.ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என்று கருணாநிதி கேட்டார். ஆனால் தற்போது சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். இது பா.ஜனதா காலம் என அண்ணாமலை பேசினார்.

கோவை: தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நடந்தது. பாப்பநாயக்கன் பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் அருகே அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் எல்.முருகன், ராஜீவ்சந்திரசேகர், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் பங்கேற்றனர்.

நடைபயணம் வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் கூறியதாவது:-

கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்கள். கோவை குண்டு வெடிப்பை அவர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். இந்தப் பகுதி மக்கள் அரசியல் சூழ்நிலையைப் பார்த்துக் கட்சியை ஆதரிப்பார்கள். கோவையின் சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது பா.ஜனதா அரசு தான். 10 ஆண்டாக எந்தப் பிரச்சினையும் இங்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் தாமரை கோவையிலிருந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

என்னை லேகியம் விற்பவர் என அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர். வருகிற 27-ந் தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும். பல்லடம் பொதுக்கூட்டத்தில் எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கேட்க வேண்டும்.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. 40-க்கு 40 வெற்றி பெறும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர வேண்டும். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவது தான் ஒரே நோக்கம்.

பா.ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என்று கருணாநிதி கேட்டார். ஆனால் தற்போது சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். இது பா.ஜனதா காலம்.

தமிழக பட்ஜெட்டே ஒரு ஏமாற்றம். மது விற்பனைமூலம் எவ்வளவு வருவாய் என்பது தெரியாமல் இருந்தது. ரூ.50 ஆயிரம் கோடி என்பது இந்தப் பட்ஜெட் மூலம் தெரியவந்தது. இது போன்று எந்த மாநிலத்திலும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகள் தி.மு.க. உள்ளே வராது. இதுதான் கடைசி முறை.

தமிழகத்தில பா.ஜ.க. 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டிப் பல ஆண்டுகள் கடந்து விட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 33 சதவீத வாக்குகள் பெறும்.

தமிழக அரசு ரூ.9½ லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. ஆனால் ரூ.8½ அரை லட்சம் கோடி கடன் என்று சொல்கிறது. ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு கணக்கில் காட்டவில்லை. இதுகுறித்து பா.ஜனதா சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் டன் உணவு உற்பத்தி குறைந்து இருக்கிறது. ஆனால் உணவு உற்பத்தி அதிகரித்ததாக வேளாண் பட்ஜெட்டில் கூறி இருக்கிறார்கள்.

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டிலேயே பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவு தான்.

நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். கோவை பாராளுமன்ற தொகுதி வெற்றியை மோடி எதிர்பார்த்து இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *