
பாரம்பரிய உடை அணிந்து பூஜை!
உத்தராகண்ட் மாநிலம் சென்ற பிரதமர் மோடி அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களைக் கண்டு களித்து அவர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள ஜாகேஷ்வர் தாம் சிவன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். ஜாகேஷ்வர் தாம் கோயில் கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் அமைந்துள்ள புண்ணியத் தலமாகும். பதித் பாவன் ஜடகங்கையின் கரையில் கோயில் அமைந்துள்ளது. சிவனும், சப்தரிஷிகளும் தவம் செய்த இடமாக இது கருதப்படுகிறது.

முன்னதாக, உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகரில் உள்ள பார்வதி குண்ட் கோயிலில் பாரம்பரிய உடை அணிந்து பூஜை நடத்தி பிரதமர் மோடி தரிசனம் செய்தார். ஆதி கைலாய தரிசனம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களைக் கண்டு களித்த பிரதமர் மோடி, அவர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தார். மேலும் உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.



