Israel Hamas War:ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மாயம்: இறந்துவிட்டாரா?

Advertisements

இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் சின்வாரால் திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை நெருங்கி உள்ள நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர் யாருடனும் தொடர்பில் இல்லாததால் அவர் இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதுதொடர்பான ஆதாரங்களைத் தேடி வருகிறது.

சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டிருக்கலாமென இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவ புலனாய்வு இயக்குனரகமும் இதே தகவலைக் கூறியது. எனினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. இது ஒருபுறமிருக்க, சின்வார் இன்னும் உயிருடன் இருக்கலாமென இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான ஷின் பெட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல்தான் இப்போதைய உக்கிரமான போருக்குக் காரணமாக அமைந்தது. இந்தத் தாக்குதல் சின்வாரால் திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு சின்வார், ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவுத் தலைவர் முஹம்மது டெயிப் மற்றும் கான் யூனிஸ் படைப்பிரிவின் தலைவர் ரபா சலாமே உள்ளிட்ட முக்கிய நபர்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மற்றும் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் துணைத் தலைவர் சலே அல்-அரூரி ஆகியோர் கொல்லப்பட்டனர். யஹ்யா சின்வாரும் அவரது சகோதரர் முஹம்மதுவும் இஸ்ரேலியப் படைகளால் தேடப்பட்ட முக்கிய நபர்களாக இருந்ததாகவும், ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *