
இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஈரான் பக்கம் நிற்கின்றன. ஆனால் ஈரானை போல் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அஜர்பைஜான், ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்காமல் நழுவி உள்ளது. அஜர்பைஜானின் நெருங்கிய கூட்டாளியான துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்டவை ஈரான் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது. ஆனால் அஜர்பைஜான் விலகி நிற்பதன் பின்னணியில் இருப்பது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் கூட 21 இஸ்லாமிய நாடுகள் இணைந்து இஸ்ரேல் நடவடிக்கையை கண்டித்தன. இந்த கண்டிப்பு நடவடிக்கையில் இருந்து அஜர்பைஜான் விலகியே உள்ளது. அதாவது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்க அந்த நாடு மறுத்து வருகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஈரான் ஷியா முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் நாடு. அதேபோல் அஜர்பைஜானிலும் ஷியா முஸ்லிம்கள் தான் அதிகம் இருக்கின்றனர். சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் இருக்கும் நாடுகளே தங்களுக்கும் இருக்கும் வேற்றுமையை மறந்து ஷியா நாடான ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ளன.
ஆனால், ஷியா பிரிவு இஸ்லாமிய நாடான அஜர்பைஜான் இதில் விலகி நிற்பது தான் பலரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது. மேலும் அஜர்பைஜானை எடுத்து கொண்டால் அதன் நெருங்கிய நட்பு நாடுகளாக பாகிஸ்தான், துருக்கி உள்ளன. இதனால் தான் சமீபத்தில் பாகிஸ்தானை நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக தாக்கியபோது அஜர்பைஜான் நம்மை கண்டித்தது. அதோடு பாகிஸ்தான் பக்கம் நின்றது. ஆனால் இப்போது ஈரானுக்கு அஜர்பைஜான் ஆதரவு தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் தான்.
யூத நாடான இஸ்ரேலுக்கும், ஷியா இஸ்லாமிய நாடாக இருக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நெருங்கிய வர்த்தக உறவு உள்ளது. அஜர்பைஜானின் பொருளாதாரத்தில் இஸ்ரேல் முக்கிய பங்காற்றி வருகிறது. அஜர்பைஜானிடம் இருந்து இஸ்ரேலுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒன் மில்லியன் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை அஜர்பைஜானிடம் இருந்து இஸ்ரேல் வாங்கி உள்ளது. இப்படியான சூழலில் ஈரானுக்கு ஆதரவாக அல்லது இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்தால்அது இஸ்ரேல் – அஜர்பைஜான் நாட்டின் வர்த்தகத்தை பாதிக்கும். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம்நாட்டு மக்களின் எதிர்ப்பை அஜர்பைஜான் சம்பாதித்துள்ளது.
நம் நாட்டில் இருந்து அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை மக்கள் நிறுத்தி உள்ளனர். அதேபோல், அஜர்பைஜானுடனான வர்த்தக உறவையும் நம் நாட்டு வர்த்தகர்கள் கைவிட்டுள்ளனர். இது அஜர்பைஜானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தால் இஸ்ரேலும் அந்த நாட்டை கைவிடும். இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான அனைத்து வர்த்தகத்தையும், முடிவுக்குக் கொண்டுவர வர்த்தக கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது. இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


