
அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், மாணவருடன் பழகிய கல்லூரி மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று கணவர் கொன்று எரித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் புலிக்குத்தி முனியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம், சுமார் 20 வயது இளம்பெண் சடலமாகக் கிடந்தார். அருகில் செருப்பு, தாலிக்கொடி ஆகியவை தனியாகக் கிடந்தன. இளம்பெண்ணைக் கழுத்தில் குத்திக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தைச் சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவராஜ் மகள் கோகிலாவாணி (20), சேலம் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் 4ம் ஆண்டு மாணவி என்றும், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற அவர், கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அவரைக் கொன்றது யார் என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாகக் கோகிலாவாணியுடன் அடிக்கடி வெளியில் சுற்றித்திரிந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியரான, எம்சிஏ பட்டதாரி முரளிகிருஷ்ணா (24) என்பவரைப் போலீசார் மடக்கி பிடித்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கோகிலாவாணியின் பாட்டி பெங்களூருவில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அங்குச் சென்ற கோகிலாவாணியின் தாயும், முரளிகிருஷ்ணாவின் சித்தியும் ஒரே கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு முரளிகிருஷ்ணாவின் குடும்பம் வந்துள்ளது. அப்போது அவருக்குக் கோகிலாவாணியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் வீட்டிற்கு தெரியாமல், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளனர். பிறகு அலைபாயுதே சினிமா படப் பாணியில் திருமணத்தை மறைத்துத் தனித்தனியே வாழ்ந்துள்ளனர். பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்த முரளிகிருஷ்ணா அவ்வப்போது சேலத்திற்கு வந்து மனைவியைச் சந்தித்துச் செல்வார். சில நேரங்களில் பெங்களூருவுக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கோகிலாவாணிக்கு, கல்லூரியில் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் காதல் வயப்பட்டதால், முரளிகிருஷ்ணாவை பிரிந்திட திட்டமிட்டு அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார். இதனை அறிந்த அவர், அந்த மாணவர்குறித்து மனைவியிடம் செல்போனில் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு நேரில் வந்து பேசுவதாகக் கூறிய முரளிகிருஷ்ணா, நேற்று முன்தினம் சேலத்திற்கு பைக்கில் வந்துள்ளார். கல்லூரியில் இருந்த கோகிலாவாணியை புதிய பஸ் நிலையத்திற்கு வரவழைத்து, பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.
தனியாக ஓரிடத்தில் அமர்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வருவோம் எனக் கூறியுள்ளார். அதன்படி காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் பைக்கை நிறுத்தி, இருவரும் பிரச்னைகுறித்து பேசியுள்ளனர். அப்போது தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்துத் திடீரெனக் கோகிலாவாணியின் கழுத்தில் கத்தியால் முரளிகிருஷ்ணா குத்தி உள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், கல்லால்அவரது முகத்தைச் சிதைத்து கொலை செய்துள்ளார். பிறகு பைக்கில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முகத்தில் ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முரளிகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். அலைபாயுதே படப் பாணியில் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், வேறொரு மாணவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் இளம்பெண் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



