போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழைவிற்ற கும்பல்!

Advertisements

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி மருத்துவர்கள் இணைந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் குஜராத்தில் போலியாக டாக்டர் பட்டப்படிப்பு சான்று பெற்று மருத்துவம் பார்த்து வந்த 14 போலி டாக்டர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சூரத்தில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகச் சென்ற புகாரின் பேரில் 3 கிளீனிக்குகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம் (பி.இ.எச்.எம்.) மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்மூலம் 3 பேர் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குஜராத்தில் இது போன்ற ஒரு படிப்பு இல்லாத நிலையில் இந்த 3 பேரும் போலியாக டாக்டர் பட்டப்படிப்புக்கான சான்றிதழை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் குஜராத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் இந்தச் சம்பவத்தில் முக்கியமானவராகச் செயல்பட்டுள்ளார். அவர் 5 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்து, எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகளைப் பரிந்துரைப்பது எப்படி? எனப் பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

அவருடன் மேலும் ஒரு டாக்டரும் சேர்ந்து போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்தவித கட்டுப்பாடு மற்றும் விதிகள் இல்லை என்பதை அறிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காகத் தனியாக ஹோமியோபதி போர்டு ஒன்றை தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விநியோகம் செய்து வந்துள்ளனர்.

இந்தக் கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு 15 நாட்களில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களைக் கொடுத்ததும் தெரியவந்தது.

பிடிபட்டவர்களின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடிக்காக அவர்கள் தனியாக ஒரு இணையதளமும் தொடங்கி உள்ளனர். அதில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற 1200 பேர்வரை பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை செய்த போலீசார் போலி டாக்டர்கள் 14 பேரைக் கைது செய்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *