
புருவத்தை திருத்தியதால் விவாகரத்து கோரிய கணவன்!
லக்னோ: மனைவி தன் புருவத்தை திருத்தியிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவர், ‘வீடியோ’ தொலைபேசி அழைப்பு வாயிலாக முத்தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவருக்கும், அதே மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்த குல்சபா என்ற பெண்ணுக்கும், 2022ல் திருமணம் நடந்தது. முகமது சலீம் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கான்பூரில் வசித்து வருகிறார். இருவரும், ‘மொபைல் போன் வீடியோ’ அழைப்பு வாயிலாக தினசரி பேசி வந்தனர். அப்படி சமீபத்தில் பேசும்போது, குல்சபாவின் புருவங்கள் திருத்தப்பட்டுள்ளதை பார்த்து முகமது அதிர்ச்சி அடைந்தார்.
அது குறித்து கேட்டபோது, அழகு நிலையம் சென்று புருவத்தை திருத்திக் கொண்டதாக குல்சபா தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது சலீம், ‘என் அனுமதி இன்றி இது போன்ற செயல்களில் ஏன் ஈடுபட்டாய்?’ என, சத்தம் போட்டதுடன், மூன்று முறை தலாக் கூறி திருமண உறவை முறித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்துள்ளது. இது குறித்து குல்சபா போலீசில் புகார் அளித்த பின் பொதுவெளிக்கு வந்தது. மேலும் மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் குல்சபா புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து முகமது சலீம் மீது மனைவியை துன்புறுத்தியது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முத்தலாக் நடைமுறையை முற்றிலுமாக ஒழித்து மத்திய அரசு 2019ல் சட்டம் இயற்றி உள்ளது. எனவே, முத்தலாக் வாயிலாக விவாகரத்து கோருவது நம் நாட்டில் சட்டவிரோதமாக கருதப்படுகிறது.


