
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான சங்கங்கள் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் சுமார் 3 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் உட்பணியாளர்கள் எனச் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.
அன்றாடம் நெசவு செய்து அதில் வரும் சொற்ப கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்தும் கைத்தறி நெசவாளர்கள், 4 லுங்கி கொண்ட ஒரு பீஸ் நெய்து மாலை வேலையில் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் கொடுத்தால் அதற்குக் கூலியாக 791/- ரூபாய் பெறுகின்றனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்கள் கடும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான,
* கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 15 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்கவும்;
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்மூலம், நெசவாளருக்கு 60 வயதிற்குமேல் வழங்கப்படும் ஓய்வு நிதி 1200/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கவும்;
கைத்தறி நெசவாளர்களுக்கு 60 வயது வரை மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படவும்;
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசே ஊதியம் வழங்கவும்,
தேசிய கைத்தறி வளர்ச்சி மையம் (NHDC) மூலம் வழங்கப்படும் பாவு நூல்,
ஊடை நூல்கள் தரமற்றவையாக உள்ளதால், அதைத் தரமான வகையில் வழங்கவும்,
திரு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் புறநகர் மாவட்டத்தின் சார்பில், 28.10.2024 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


