இ.பி.எஸ்.,க்கு தகுதியில்லை – ஆர்.எஸ்.பாரதி!

Advertisements

சென்னை:

 ‘கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, ஆனால் அதுபற்றிப் பேச, இ.பி.எஸ்., க்கு தகுதியில்லை’ என அ.தி.மு.க., ஆட்சியில் கொலை சம்பவங்களை லிஸ்ட் போட்டுத் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.

‘தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசுச் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியது’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார். இது தொடர்பாகச் சென்னையில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சாவூரில் ஆசிரியை கொலை, ஓசூரில் வழக்கறிஞர்மீது தாக்குதல் தனிப்பட்ட விரோதத்தால் நடந்தவை. தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இ.பி.எஸ்., புரிந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்றது, கோடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்கள் தான் சட்டம் ஒழுங்குப் பிரச்னை. அ.தி.மு.க., ஆட்சியில் பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மக்கள் மத்தியில் தவறான கருத்தைப் பரப்ப முட்டிப் போட்டுக் கரணங்கள் அடிக்கிறார் இ.பி.எஸ்,. தன் மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கியவர் தான் இ.பி.எஸ்., கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணையை வரவேற்கும் இ.பி.எஸ்., தன் மீதான புகாரில் சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பதேன்?

மனசாட்சியை அடகு வைத்துவிட்டு இ.பி.எஸ்., அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சியில் குற்றங்கள், கொலைகள் குறைந்துள்ளது. கொலைகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, ஆனால் அதுபற்றிப் பேச, இ.பி.எஸ்., க்கு தகுதியில்லை. தி.மு.க., வின் சிறப்பான ஆட்சியை நீதிமன்றமே பாராட்டி உள்ளது. தமிழகத்தில் 79 சதவீதம் மக்கள் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் 2020ம் ஆண்டில் 1252 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு 799 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. பழனிசாமி போல் நாங்கள் கணக்கிட்டு சொன்னால் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் பதிவாகியுள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *