
சென்னை:
தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாகக் கூறி இன்று காலை 10 மணிக்குத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் திமுக அறிவுத்துள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சட்டசபை தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கவில்லையெனக் குற்றம்சாட்டிய ஆளுநர் ரவி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். இதனால் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.
இதற்கு முதல்வர் உள்ளிட்டோர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் திமுக முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாகத் தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.



