
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை எடுத்து சென்றபோது இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்து சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என்று தெரிவித்தார். இந்நிலையில், கிரேட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்துள்ளார். இதில், கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார் என்றும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று கிண்டலாகத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கிரேட்டா தன்பெர்க், கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் டிரம்ப்பிடம் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கடந்தகால செயல்பாடுகளைப் பார்த்தால் அதிபருக்கும் இதே பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தார்.
