chennai:உச்சகட்ட மோதல்.! பாஜகவில் ஜெயிக்கப் போவது அண்ணாமலையா.? தமிழிசையா.?

Advertisements

தமிழக பாஜகவில் அண்ணாமலை – தமிழிசை இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்ததால், பாஜக தொண்டர்கள் தமிழிசையை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ‘தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார் தமிழிசை.

தமிழிசையும் பாஜகவும்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் துணை இல்லாமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து தென் மாநிலத்தின் மீது பார்வையை திருப்பிய பாஜக தேசிய மேலிடம், அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் 2014ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசையை நியமித்தது. அவரின் தீவிர செயல்பட்டால் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். தமிழகம் முழுவதும் பாஜகவின் பெயர் வேகமாக பரவியது.

ஆளுநர் பொறுப்பு கொடுத்த அழகு பார்த்த பாஜக

தமிழிசையின் தாமரை மலரும், மலர்ந்தே தீரும் என்ற வசனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சுமார் 5 ஆண்டு காலம் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இருந்த போதும் தேர்தலில் வெற்றி பெறாதநிலையில் ஆளுநர் பொறுப்பு வழங்கி அழகு பார்த்தது பாஜக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த தமிழிசை அரசியல் ஆர்வம் காரணமாக மீண்டும் அரசியல் களத்தில் இறங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வி அடைந்தார்.

கட்சியில் மரியாதை இல்லை

இதனால் ஆளுநர் பதவியும் இல்லாமல் , கட்சியில் பொறுப்பும் இல்லாமல் தமிழிசை இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்து கருத்துகளை கூறி வந்தார். இது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. தமிழிசைக்கு எதிராக பாஜக வார் ரூம் களத்தில் இறங்கி விமர்சிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தமிழிசை வார் ரூம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அண்ணாமலை- தமிழிசை மோதல் வெட்ட வெளிச்சமானது.

தமிழிசைக்கு எச்சரிக்கை

இதனையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசையை பொது மேடையிலையே கடுமையாக எச்சரித்தார் அமித்ஷா, இதனால் சில நாட்கள் அமைதி காத்த தமிழிசை மீண்டும் பேச தொடங்கினார். அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசிமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் தமிழிசை அறிவுரை வழங்கினார். அரசியல் கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மீண்டும் வெடித்த மோதல்

இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, எனது பேச்சை திரும்ப வாங்க முடியாது. இதில் சீனியர் ஜூனியர் என்ற பேச்சே இல்லையென கூறினார். அண்ணாமலை மீதான தமிழிசை பேச்சுக்கு பாஜகவின் ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் தமிழிசையை விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழிசை பாஜகவிற்கு செய்ததை விட அவருக்கு பாஜக அதிகம் செய்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழிசை அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருக்குறளை பதிவு செய்த தமிழிசை

இந்தநிலையில் தமிழிசை திடீரென தனது சமூகவலைதளத்தில் தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்ற திருக்குறள் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன் விளக்கமானது. மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு யாரை குறித்து தமிழிசை வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் பெரும்பாலும் அண்ணாமலையை குறிவைத்து பதிவு செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *