
அரியவகைத் தாதுக்களின் உற்பத்தியில் தற்சார்பை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் உரிமைத் தொகையை மத்திய அரசு குறைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சீசியம், கிராபைட், ரூபிடியம், சிர்க்கோனியம் ஆகிய அரிய வகைத் தாதுக்களின் உரிமைத் தொகையைக் குறைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மின்னணுக் கருவிகளின் உற்பத்திக்கு அடிப்படைத் தேவையான இந்தத் தாதுக்களின் உற்பத்திக்கு அரசின் இந்த முடிவு ஊக்கமளிக்கும் என்று மத்திய அமைச்சர் கிசன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனிமத் தொகுதிகளின் ஏலத்தின் மூலம் புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறையும் என்றும், இந்தியாவின் எரியாற்றல் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



