
பிரேக் பிடிக்கவில்லை எனச் சொல்லி அரசுப் பேருந்தை ஆர்டிஓ அலுவலகத்தில் விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள ராணித்தோட்டம் ஒன்றாவது பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஒன்று திருநெல்வேலி – நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக இந்த பேருந்தினை கன்னியாகுமரி மாவட்டம், மேலசங்கரன் குழியைச் சேர்ந்த ஞான பெர்க்மான்ஸ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார்.
இந்தநிலையில் இந்த பேருந்து கடந்த சில நாட்களாக பாதி வழியிலேயே பழுதாகி நின்று விடும் நிலையில் இருந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தெரிவித்தும் பேருந்தைப் பழுது நீக்க முன்வரவில்லை.
இந்தப் பேருந்து வள்ளியூர் அருகில் சென்றபோது திடீர் என பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கடுப்படைந்த ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ், அந்த பேருந்தை நாகர்கோவில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டார். அங்கிருந்த அதிகாரியிடம் பேருந்தின் நிலை குறித்து புகார் கொடுத்துள்ளார்.
பெர்க்காமன்ஸ் இந்த பேருந்தில் பிரேக் கூடப் பிடிக்கவில்லை என்பதாகத்தான் புகார் கொடுத்து இருந்தார். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் பேருந்து இயல்பாகவே இருப்பதாகவும், எந்தக் காரணமும் இல்லாமல் ஞான பெர்க்காமன்ஸ் பஸ்சை ஆர்டிஓ அலுவலகத்திற்குக் கொண்டு சென்றதாகவும் நேற்று மாலை அவருக்கு, போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் நோட்டீஸ் வழங்கினர். இச்சம்பவம் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

