தள்ளுவண்டி தம்பதியை மிரட்டிய பாஜக நிர்வாகி!

Advertisements

கோவை:

தள்ளுவண்டியில் பீஃப் கடை நடத்தி வரும் தம்பதியைப் பாஜக நிர்வாகி மிரட்டிய வீடியோ சோசியல் மீடியாவில் விவாதமாகியுள்ளது. ஊர்க் கட்டுப்பாடு இருப்பதால் பீஃப் கடை நடத்தக் கூடாது என்று மிரட்டியதாகவும், அவர்கள் சைவ சாப்பாடு விற்பனை செய்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பாஜக நிர்வாகி தனது செயலுக்கு நியாயம் தெரிவித்துள்ளார்.

கோவை உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டி கடையை நடத்தி வருபவர்கள் ரவி – அபிதா தம்பதியினர். மூன்று சந்திப்பு பகுதியில் மாட்டிறைச்சி உணவுக் கடையை நடத்தி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாஜக நிர்வாகி ஒருவர் பீஃப் பிரியாணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது, கடை நடத்தக் கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், “இது ஊர்க் கட்டுப்பாடு” என்றும் மிரட்ட, இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவிட, அந்த மக்கள் மத்தியில் ட்ரெண்டாகியது.

இதன்பின் ரவி – அபிதா தம்பதியினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று முதலில் எங்களை மிரட்டினார். ஆனால் நாங்கள் அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் சில நாட்களில் மீண்டும் வந்து, அன்றே கடையைக் காலி செய்யக் கூறினேனே… இன்னும் ஏன் கடை இங்கு இருக்கிறது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

இதனால் கடையில் உணவு சாப்பிட்டவர்களும் அச்சமடைந்தனர். 10 பேருடன் வந்து கடையை உடைத்துவிடுவேன் என்றும் கூறினார். இட்லி, தோசைக் கடை வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்றும், பீஃப் கடை போடக் கூடாது என்றும் மிரட்டுகிறார்கள்.

எங்களுக்குத் தெரிந்த தொழிலைத் தான் நாங்கள் செய்ய முடியும். அருகிலேயே சிக்கன் ரைஸ், மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவர்களுக்கு பீஃப் என்றால் மட்டும் கேவலம்.

இது ஆரோக்கியமான உணவு. இதனைக் கேவலமாகப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. யாரையும் வற்புறுத்தி விற்பனை செய்யவில்லை. இது பீஃப் என்று சொல்லித் தான் உணவினை விற்பனை செய்கிறோம்.

அனைவரும் தெரிந்து தான் பீப் உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். அவர்களின் மிரட்டலில் நிம்மதி இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் தள்ளுவண்டி உரிமையாளர்களை மிரட்டியவர் பாஜக ஓபிசி அணியின் மாநக மாவட்ட செயலாளர் சுப்ரமணி என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாகச் சுப்ரமணி பேசுகையில், இங்கு பீஃப் கடை போடக் கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது.

அதன் காரணமாகத் தான் பீஃப் கடை போடக் கூடாது என்று கூறினேன். கோவில், பள்ளிகள் அருகில் பீஃப் கடை போடுவது தான் பிரச்சனை. அங்கிருக்கும் மாமிச கடைகளை அகற்றவும் கூறி இருக்கிறோம்.

சைவ சாப்பாடு விற்பனை செய்தால் எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறி இருக்கிறார். எங்கு என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை ஊர்க் கட்டுப்பாடு என்று மற்றவர்கள் மிரட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *