
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வந்தது.இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்ற இழுபறி 10 நாட்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் பாஜக மத்திய பார்வையாளர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.களின் கூட்டத்தில் பஜன்லால் சர்மா ஒருமனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு துணை முதல்வர்கள்- தியா சிங் மற்றும் டாக்டர் பிரேம் சந்த் பைர்வாதேர்வு செய்யப்பட்டுள்ளார். வாசுதேவ் தேவ்னானி சபாநாயகராக வருவார்” என்று ராஜஸ்தான் மாநில பாஜக மத்திய பார்வையாளர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாராக இருக்கும் பஜன்லால் சர்மா, சங்கனேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 199 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சி அமைக்கிறது.

